X

ட்விட்டர் இப்போது தான் ஒரு புத்திசாலி கையில் இருக்கிறது – டிரம்ப் பாராட்டு

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்க நாடாளுமன்றம் கூடியபோது, முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து டிரம்ப் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள், டிரம்பின் அனைத்து கணக்குகளையும் முடக்கின. அந்த வகையில் டுவிட்டர் நிறுவனம் அவருக்கு நிரந்தர தடை விதித்தது. இதனால் கோபமடைந்த டிரம்ப், ‘டுரூத் சோசியல்’ என்ற பெயரில் தனது சொந்த சமூக வலைதளத்தை உருவாக்கினர்.

இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனம் தற்போது எலான் மஸ்க்கின் வசமாகியுள்ளது. இதையடுத்து டிரம்ப் மீதான வாழ்நாள் தடையை நீக்குவது குறித்து எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள்ளார். டிரம்ப் மீண்டும் அனுமதிக்கப்படுவாரா என்பது குறித்து முடிவெடுக்கும் கவுன்சில் ஒன்றை அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் டுவிட்டர் கைமாறியதை டிரம்ப் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “டுவிட்டர் இப்போது ஒரு தான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது. இனிமேல் நம் தேசத்தை வெறுக்கும் இடதுசாரி மனநோயாளிகள் கையில் இருக்காது” என்று கூறியுள்ளார்.