ட்விட்டரில் காங்கிரசை தொடர்ந்து விமர்சித்து வரும் குஷ்பு
நடிகை குஷ்பு பா.ஜனதாவில் சேர்ந்தபிறகு அந்த கட்சி பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
குஷ்புவை பொறுத்தவரை காங்கிரசில் இருந்தபோதும், அவரது மனதில் பட்டதை சொந்த கட்சியாக இருந்தாலும், வெளிப்படையாக தெரிவித்து விடுவார். அதனால் அவர் எதிர்ப்புகளை சந்தித்ததும் உண்டு.
இப்போது பா.ஜனதாவில் இருக்கும்போது தெருவுக்கு தெரு தாமரை மலரும் என்று அதிரடியாய் கருத்து தெரிவித்தார். அதேபோல் திருமாவளவனையும் வறுத்தெடுக்க தவறவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகளில் மாற்றம் வரும். கூடுதல் சுமை என நினைத்து காங்கிரஸ் தனித்து விடப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்றும் அடிக்கடி கையை கழுவுங்கள் என்பது கொரோனா சொல்லிய பாடம். ஆனால் நிரந்தரமாய் கையை கழுவுங்கள் என்பது மோடி பீகாரில் உணர்த்திய பாடம்.
வரும் தேர்தலில் தமிழகத்திலும் அந்த நிலை எதிரொலிக்கும் என்று டுவிட்டரில் ஒரு பதிவை போட்டார். அது காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இப்போது மேலும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நான் காங்கிரசை விட்டு விலகியதால் நிறைய காங்கிரஸ் நண்பர்கள் வருத்தப்படுகிறார்கள். மனம் புண்பட்டுள்ளனர்.
ஆனால் இதை வெளியில் சொல்லிடாதீங்க. உங்களை கட்சி காயப்படுத்திவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவுதான் காங்கிரசை தெறிக்க விட்டுள்ளது. பா.ஜனதாவில் இருக்கும் குஷ்புவுக்கு காங்கிரசில் இருந்து ஆதரவு கொடுப்பவர்கள் யார்? வருத்தப்படுபவர்கள் யார்? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும் போது, காங்கிரசில் அதிருப்தியாளர்கள் இருப்பது உண்மைதான். குஷ்புவின் இந்த டுவிட்டர் பதிவை ஒரு எச்சரிக்கையாக எடுத்து கொண்டு அதிருப்தியை சரி கட்ட வேண்டும் என்றனர்.