விக்ரம் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர், அடுத்தடுத்து இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. விருதுகளையும் வாரிக்குவித்தன. குறிப்பாக நான் கடவுள் படத்திற்காக பாலாவுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இந்நிலையில் இயக்குனர் பாலா டுவிட்டர் தளத்தில் இணைந்துள்ளார். அதில் தனது முதல் டுவிட்டாக, சமீபத்தில் தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார் பாலா.
அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தேவையற்ற வாழ்ததுரைகள் தெரிவிப்பதைத் தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டீர்கள். ஆனாலும் இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம். நன்றிகள்”.
“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி. (குறள்)”
என்று பாலா அந்த டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.