Tamilவிளையாட்டு

டோனி பாணியை பின்பற்ற தொடங்கிய ஹர்திக் பாண்ட்யா

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய கடைசி டி20 போட்டியில் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக சுப்மன் கில்லும் தொடர் நாயகனாக ஹர்திக் பாண்ட்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

டோனி இருக்கும் போது சிக்சர் அடிக்க பிடிக்கும். ஆனால் இப்போ பாட்னர்ஷிப் அமைக்க பிடிக்குது என இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:-

எனக்கு சிக்ஸர்கள் அடிப்பது என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு பிடிக்கும் என்பதற்காக நான் அதை செய்து கொண்டிருக்க முடியாது. அன்றையநாள் போட்டியில் என்ன தேவை மற்றும் அணியில் எனது ரோல் என்ன என்பதை புரிந்து விளையாடி வருகிறேன்.

ஒருபுறம் சிக்ஸர்கள் அடிக்க பிடிக்கும் என்றால், மறுபுறம் பார்ட்னர்ஷிப் அமைப்பது பிடிக்கும், அதேபோல் நன்றாக விளையாடி வரும் வீரருக்கு பக்கபலமாக நின்று துணை கொடுப்பதும் பிடிக்கும். மேலும் தற்போது கேப்டனாக விளையாடி வருவதால் இறுதிவரை களத்தில் நின்று அணியின் வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வருவதும் பிடித்திருக்கிறது.

கடந்த காலங்களில் அணியில் டோனி இருந்தார். கீழ் வரிசையில் நிதானம் காட்டுவார். அவர் இருக்கும் தைரியத்தில் நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்சர்கள் பவுண்டரிகளாக அடித்து வந்தேன். ஆனால் இப்போது அவர் இல்லை. நிதானமாக விளையாட வேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது.

அணியின் கேப்டனாகவும் இருக்கிறேன். ஆகையால் எனக்கு எந்த ரோல் வேண்டும். மற்ற வீரர்களுக்கு எந்த ரோல் கொடுத்தால் அவர்களிடம் இருந்து அதிக ஆற்றலை வெளிக்கொணர முடியும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.