விராட் கோலி தலைமையில் இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பையை சந்திக்க இருக்கிறது. எம்எஸ் டோனி விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். விராட் கோலி கேப்டன் குறித்து விமர்சனம் பெருகி வரும் நிலையில், டோனி குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது.
டோனி குறித்த விமர்சனத்திற்கு அவ்வப்போது விராட் கோலி தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அணியில் இருந்தால் அது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் டோனியை பற்றி என்ன கூற முடியும்?. அவரது தலைமையில்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது. கடந்த சில வருடங்களாக அவரை நான் அருகில் இருந்து பார்த்து வருகிறேன். அவரும் அப்படித்தான்.
டோனியைப் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால், எந்தவொரு விஷயத்தையும் விட அணி உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதுதான். எப்போதுமே அணியை பற்றிதான் எங்கள் எண்ணங்கள் இருக்கும். வேறு எந்த விஷயமும் இல்லை.
அவர் அனுபவத்தை எங்களுக்கு பகிர்ந்தளிப்பார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் கூட அவரது சில ஸ்டம்பிங், போட்டியின் திருப்பத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது.
டோனி மீதான விமர்சனம் துரதிருஷ்டவசமானது. நியாயமாக சொல்ல வேண்டுமென்றால், விமர்சனம் செய்பவர்களுக்கு பொறுமை சற்று குறைவு என நினைக்கிறேன். அவர் மீதான விமர்சனம் முடிவில்லாமல் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், எம்எஸ் டோனி கிரிக்கெட்டில் மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்.
ஸ்டம்பிற்கு பின்னால் விக்கெட் கீப்பராக பணியாற்றும் அவர், விலைமதிப்பற்றவர். என்னுடைய எண்ணங்களை சுதந்திரமாக செயல்படுத்த அவர் உதவி செய்கிறார். டோனியை போன்ற அனுபவமிக்க ஒருவர் இருப்பது சிறப்பானது’’ என்றார்.