டோனியை போல் பென் ஸ்டோக் செயல்படுகிறார் – ரிக்கி பாண்டிங் கருத்து
ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலிரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது.
2-வது போட்டியில் 371 ரன்களை துரத்தும் போது ஜோ ரூட் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் கைவிட்டதால் 45/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இங்கிலாந்தை பென் டூக்கெட் உடன் இணைந்து பென் ஸ்டோக்ஸ் போராடினார். அதில் பென் டூக்கெட் 82 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜானி பேரஸ்டோவும் சர்ச்சைகுரிய வகையில் அவுட் ஆகி வெளியேறியதால் இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது.
இருப்பினும் மறுபுறம் மனம் தளராமல் போராடிய பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களில் இருந்த போது ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி சதமடித்து வெற்றிக்கு போராடினார். அதன் காரணமாக இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2019-ல் ஹெண்டிங்க்லே மைதானத்தில் தனி ஒருவனாக 135* ரன்கள் குவித்து வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி காப்பாற்றியதை போல் இங்கிலாந்தை வெற்றி பெற வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டது.
இருப்பினும் முடிந்தளவுக்கு போராடிய அவர் 9 பவுண்டரி 9 சிக்க்சருடன் 155 ரன்களில் அவுட்டானதால் இங்கிலாந்து எதிர்பார்த்தது போல் தோற்றது. இருப்பினும் கேப்டனுக்கு அடையாளமாக மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய அவர் அனைவரது பாராட்டுகளைப் பெற்றார்.
இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி அழுத்தமான சமயங்களில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுப்பது போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஃபினிஷராக செயல்படும் திறமையைக் கொண்டுள்ளதாக ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் களத்திற்கு செல்லும் போது அழுத்தத்துடனேயே விளையாடுவார்கள். ஆனால் மிடில் அல்லது லோயர் மிடில் ஆர்டரில் மற்றவர்களை காட்டிலும் பென் ஸ்டோக்ஸ் தம்மால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாய்ப்புகளை தேடுகிறார். அது போன்ற சூழ்நிலைகளில் அசத்தும் வீரர்களை நினைத்தால் எனக்கு டோனி தான் முதலில் நினைவுக்கு வருவார். குறிப்பாக அவர் டி20 கிரிக்கெட்டில் ஃபினிஷிங் செய்யும் விதத்தைப் போல டெஸ்ட் போட்டிகளில் கடைசி நேரத்தில் பென் செயல்படுகிறார்.
அந்த வகையில் வரலாற்றில் அழுத்தமான கடைசி நேரத்தில் அதிலும் கேப்டனாக நின்று வெற்றி பெற வைக்கும் திறமை பெரும்பாலானவர்களிடம் இருந்ததில்லை. சொல்லப்போனால் அந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் எனக்கு 2019 ஹெண்டிங்க்லே போட்டியை நினைவுப்படுத்தியது. முதலில் ஸ்டீவ் ஸ்மித் கேட்ச் தவறை விட்டதைப்போல 116 ரன்களில் இருக்கும் போது மார்க்கஸ் ஹரிஷ் தவற விட்டார். அதனால் அதே போல இப்போட்டியிலும் அவர் வெற்றியை பறித்து விடுவாரோ என்ற பயம் எங்களது மனதிற்குள் இருந்தது.
இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.