டோனியை பார்த்து பல ஷாட்களை காப்பியடித்திருக்கிறேன் – ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் தொடரில் 15-வது லீக் ஆட்டம் நேற்று முன் தினம் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 170 ரன்கள் குவித்தது. இதற்கு ஹர்திக் பாண்டியாவின் அதிரடி முக்கிய காரணமாக அமைந்தது.
அவர் பிராவோ வீசிய கடைசி ஓவரில் இமாலய சிக்சர்கள் விளாசினார். அதில் ஒன்று டோனி போன்று அற்புதமான வகையில் ஹெலிகாப்டர் ஷாட். 91 மீட்டர் தூரத்திற்குச் சென்றது. ஹர்திக் பாண்டியா 8 பந்தில் 25 ரன்கள் குவித்ததுடன் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
ஹெலிகாப்டர் ஷாட் குறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க நான் பயிற்சி செய்து கொண்டிருப்பது மிகவும் சிறப்பானது. இந்த ஷாட்டிற்குப் பிறகு எம்எஸ் டோனி என்னிடம் வந்து ‘குட் ஷாட்’ என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படி நடந்தால் நான் பெருமையடைவேன்.
பொதுவாக எதிரணி பந்து வீச்சாளர்கள் எனக்கு எதிராக ஸ்டம்பை நோக்கி பந்து வீச விரும்புவார்கள். ஆனால் இதுபோன்ற ஷாட் எளிதானது கிடையாது. ஆனால், எம்எஸ் டோனி இதுபோன்ற ஷாட்டை பலமுறை அடித்ததை பார்த்திருக்கிறேன்.
டோனி எங்களுக்கு உத்வேகமாக இருக்கிறார். நாங்கள் அவரிடம் இருந்து ஏராளமான ஷாட்ஸ்களை காப்பியடிக்க முயற்சிக்கிறோம். அவரிடம் இருந்து காப்பியடித்த ஒரு ஷாட்தான் இது. சிறப்பாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி’’ என்றார்.