டோனியை நான் ஆலோசகராகவே பார்க்கிறேன் – ரிஷப் பந்த்
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்-ஐ எம்எஸ் டோனியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் நான் டோனியை ஆலோசகராக பார்க்கிறேன் என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘சில நேரங்களில் டோனியுடன் ஒப்பிடுவது குறித்து நான் யோசனை செய்தது உண்டு. ஆனால், அது மிகவும் கஷ்டமானது. நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கும்போது, ஒரேநாளில் அவருடைய அனைத்தை யுக்திகளையும் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கவில்லை.
அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நான் அவரை ஆலோசகராகவே கருதுகிறேன். பல விஷயங்களை எனக்கு கற்றுத் தந்துள்ளார். நெருக்கடியான நிலையில் எப்படி அமைதியாக இருக்க வேண்டும், பேட்டிங் செய்ய செல்வதற்கு முன் மனநிலையை எப்படி வைத்திருக்க வேண்டும் போன்றவை குறித்து அவர் எனக்கு சொல்லித் தந்துள்ளார்.
எனக்கு 21 வயதுதான் ஆகிறது. அப்போது டோனியின் இடத்தை நிரப்புவது குறித்து யோசித்தால், பின்னர் அது எனக்கு சிக்கலாக முடிந்து விடும். என்னுடைய திறமைக்கு ஏற்ப சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். என்னை சுற்றியுள்ள ஒவ்வொரு வீரர்களிடம் இருந்தும், குறிப்பாக சீனியர் வீரர்களிடம் இருந்தும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’’ என்றார்.