டோனியின் அறிவுரை அதிக முறை தவறாகத் தான் இருக்கும் – குல்தீப் யாதாவ் குற்றச்சாட்டு

நவீன கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த கேப்டனாக விளங்கியவர் டோனி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், டோனி ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியை பல்வேறு உச்ச நிலைக்கு அழைத்து சென்றுள்ள 37 வயதான டோனி கேப்டன் பொறுப்பில் இல்லாவிட்டாலும், தற்போதைய கேப்டன் விராட்கோலி மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவது வாடிக்கையாகும்.

குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்தும் வகையில் பந்து வீசுவது எப்படி என்பதை ஆடுகளத்தின் தன்மை மற்றும் எதிரணி பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை கணித்து அறிவுரை வழங்குவார். அவரது ஆலோசனை மற்றும் அணுகுமுறைக்கு பல சமயங்களில் நல்ல பலன் கிடைக்கும். டோனியின் ஆலோசனையை கேட்டு பந்து வீசி விக்கெட்டை சாய்த்ததாக பல பந்து வீச்சாளர்கள் பெருமையாக சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் டோனியின் அறிவுரை குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முதல்முறையாக குறை கூறி இருக்கிறார். சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட குல்தீப் யாதவிடம் டோனியின் டிப்ஸ் உங்களது பந்து வீச்சுக்கு உதவியதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குல்தீப் யாதவ் பதிலளிக்கையில், ‘டோனி எனக்கு அளித்த அறிவுரை அதிக முறை தப்பாக தான் முடிந்தது. அவர் சொல்வது போல் பந்து வீசி அது சரியாக அமையாவிட்டாலும் அதனை நீங்கள் அவரிடம் போய் சொல்ல முடியாது. அதுமட்டுமின்றி டோனி அதிகம் பேச மாட்டார். அதுவும் ஓவர்களுக்கு இடையே தான் வந்து பேசுவார். முக்கியமான விஷயத்தை பந்து வீச்சாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே வந்து சொல்வார்’ என்று தெரிவித்தார்.

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியும், குல்தீப் யாதவும் இணைந்து விளையாட இருக்கும் நிலையில் குல்தீப் யாதவின் இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு உலக கோப்பையையும் (50 ஓவர்) இந்திய அணி டோனி தலைமையில் தான் வென்றது. 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, 2017-ம் ஆண்டில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news