டோனியின் அறிவுரையின்படி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன் – சிஎஸ்கே வீரர் ரஹானே

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை ஊதித்தள்ளியது. இதில் மும்பை நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை சென்னை அணி, அஜிங்யா ரஹானேவின் மிரட்டலான அரை சதத்தால் 18.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

19 பந்துகளில் 50 ரன்களை கடந்து நடப்பு தொடரில் மின்னல்வேக அரைசதம் அடித்த வீரர் என்ற சிறப்பை ரஹானே பெற்றார். இவர், மொத்தம் 61 ரன்கள் (27 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்தார். இதுகுறித்து ரஹானே நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் எப்போதும் வான்கடே ஸ்டேடியத்தில் ரசித்து அனுபவித்து விளையாடுவேன். ஆனால் இங்கு நான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடியதில்லை. இந்திய அணிக்காக இங்கு ஒரு டெஸ்ட் போட்டியிலாவது விளையாட விரும்புகிறேன்’ என்றார்.

மேலும் ரஹானே கூறுகையில், ‘ஆடும் லெவனில் எனக்கு இடம் கிடைக்குமா என்பதில் உறுதி இல்லாமல் இருந்தது. ‘டாஸ்’ போடுவதற்கு சற்று முன்பு தான் எனக்கே நான் விளையாடுவது தெரியவந்தது. மொயீன் அலிக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆடும் லெவனில் என்னை சேர்த்திருப்பதாக பயிற்சியாளர் தெரிவித்தார்.

ஐ.பி.எல். ஒரு நீண்ட தொடர். இதில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எந்த நேரத்தில் வாய்ப்பு வந்தாலும், அதற்கு தயாராக இருக்க வேண்டும். கேப்டன் தோனியும், பயிற்சியாளர் பிளமிங்கும் ஒவ்வொருவரையும் சுதந்திரமாக விளையாட அனுமதி அளித்துள்ளனர்.

அழுத்தமின்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்படி தோனி என்னிடம் கூறினார். அதன்படியே நான் விளையாடினேன். என்னை பொறுத்தவரை நான் நம்பிக்கையை ஒரு போதும் விட்டுவிடமாட்டேன். உற்சாகமாக, ஆர்வமுடன் தொடர்ந்து விளையாடுவதில் தான் எல்லாமே இருக்கிறது. எந்த வடிவிலான கிரிக்கெட் என்றாலும் அதில் ஒவ்வொரு முறையும் எனது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்குவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools