இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கியவர் எம்எஸ் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, கடந்த 2016-ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக திகழ்ந்து வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி துணைக் கேப்டன் ரோகித் சர்மா, எம்எஸ் டோனி ஆகியோருடன் முக்கியமான கட்டத்தில் ஆலோசனை கேட்பது வழக்கமாக கொண்டுள்ளார்.
கடைசி டெத் ஓவர்களில் பீல்டிங் அமைக்கும் பொறுப்பை டோனியுடன் கொடுத்துவிட்டு, பவுண்டரி லைன் அருகே எந்தவித நெருக்கடியும் இல்லாமல் பீல்டிங் செய்து கொண்டிருப்பார். போட்டியை பார்க்கும்போது இது தெளிவாகத்தெரியும்.
இந்நிலையில் கேப்டன் பதவி வகிக்கும் விராட் கோலியை மிகவும் வசதியான நபராக டோனி உருவாக்குகிறார் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘விராட் கோலி சிறந்த கேப்டன் என்பதை விட, மிகவும் வசதியான கேப்டனாகவே இருக்கிறார் என்று நினைக்கிறேன். டோனி ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும்போது விராட் கோலி மிகவும் வசதியாக வளம் வருகிறார். அவருக்கும் டோனிக்கும் இடையிலான பேச்சு, சரியான முடிவை எடுக்க விராட் கோலிக்கு உதவுகிறது.
டோனி நீண்ட காலமாக கேப்டன் பதவியில் இருந்தவர். ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும் அவரால், போட்டி எந்த சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை மற்றவர்களை விட திறமையாக அறிந்து கொள்கிறார். பந்து வீச்சாளரிடம் எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகளை வழங்க முடியும். அதேபோல் பீல்டிங்கையுட் செட் செய்ய முடியும்’’ என்றார்.