இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருப்பவர் சஹா. எம்எஸ் டோனி விளையாடிய காலத்திலேயே அணியில் இருந்தவர். எந்தவொரு தொடராக இருந்தாலும் மாற்று விக்கெட் கீப்பராக அழைத்துச் செல்லப்படுவார். ஆனால் வாய்ப்பு கிடைக்காது.
டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆக எம்எஸ் டோனிதான் முக்கிய காரணம். ஆனால் எம்எஸ் டோனிக்கு மாற்று வீரர் நானில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சஹா கூறுகையில் ‘‘நான் எம்எஸ் டோனியின் இடத்தை நிரப்பவில்லை. டோனி ஓய்வு பெற்ற பிறகு எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தினத்தன்று விவிஎஸ் லக்ஷ்மண் காயம் காரணமாக விளையாடவில்லை.
அவருக்குப் பதிலாக ரோகித் ஷர்மாவை அணியில் சேர்த்தனர். அப்போது பயிற்சியில் நானும் ரோகித் ஷர்மாவும் எதிர்பாராத விதமாக ஒருவர் மீது மற்றொருவர் மோதிக் கொண்டோம். அதில் இருவரும் காயமடைந்தோம். ரோகித் விளையாட முடியாத அளவிற்குக் காயமடைந்தார்.
பின்னர் போட்டி தொடங்கும் நேரம் வந்ததால் தென்னாப்பிரிக்க கேப்டனுடன் எம்எஸ் டோனியும் டாஸ் போட்டுவிட்டு வந்தார். வரும்போது என்னைப் பார்த்து நீ இன்று விளையாடுகிறாய் சாஹா என்றார். என்னால் நம்ப முடியவில்லை.
ஏனென்றால் பயிற்சியாளர் என்னிடம் டோனி இருப்பதால் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருந்தார். அப்போது எம்எஸ் டோனிதான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். பின்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றுவிட, அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு கீப்பராக, பேட்ஸ்மேனாக, வேகமாக ஸ்டெம்பிங் செய்வது என எம்எஸ் டோனியிடம் கற்றுக்கொள்ள ஏராளமானவை இருக்கின்றன’’ என்றார்.