டோனிக்கு கொடுத்த தண்டனை பத்தாது – ஷேவாக் கருத்து

ஐ.பி.எல். போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4-வது பந்தை ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் புல்டாசாக வீசினார். அப்போது களத்தில் இருந்த 2 நடுவர்களில் ஒருவர் அது ‘நோ-பால்’ என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் ‘நோ-பால்’ இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் வீரர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த சென்னை அணியின் கேப்டன் டோனி மைதானத்துக்குள் நுழைந்து ‘நோ-பாலை’ ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார்.

டோனியின் இந்த செயலை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய முன்னாள் வீரர் பி‌‌ஷன்சிங் பெடி உள்பட பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவிக்கையில், ‘டோனி எளிதான தண்டனையுடன் விடுவிக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன். அவருக்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும். ஏனெனில் அவர் செய்ததை போல் நாளை மற்றொரு கேப்டன் செய்யக்கூடும். அப்படியானால் நடுவருக்கு என்ன மரியாதை இருக்கும். அவர் மைதானத்துக்குள் செல்லாமல் 4-வது நடுவருடன் ‘வாக்கி-டாக்கி’ மூலம் பேசி முறையிட்டு இருக்க வேண்டும். டோனி இந்திய அணிக்கு ஏராளமாக பங்களித்து இருக்கிறார். அது மகிழ்ச்சியான வி‌‌ஷயம் தான். அவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த போது கோபப்பட்டதை நான் பார்த்தது இல்லை. சென்னை அணிக்காக அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக நினைக்கிறேன்’ என்றார்.

இதற்கிடையே டோனிக்கு புகழாரம் சூட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா) அளித்த ஒரு பேட்டியில், ‘டோனி மிகச்சிறந்த கேப்டன். அவர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவக்கூடியவர். இதன் காரணமாகவே நான் டோனி நடத்தும் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டேன். டோனியின் பேச்சும், செயல்பாடும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும்’ என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news