டோனிக்கு எப்போதுமே விசுவாசமாக இருப்பேன் – விராட் கோலி
இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
போட்டியின் தன்மையை ஆடுகளத்தின் உள்ளேயும், வெளியேயும் கணிக்க கூடியவர் டோனி. முதல் பந்தில் இருந்து 300-வது பந்துவரை என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடியவர், ஸ்டம்புக்கு பின்னால் டோனி இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்.
அவரை பலரும் விமர்சனம் செய்வது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒவ்வொரு போட்டி முடிந்ததும் டோனி மற்றும் ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்த விரும்புவேன்.
டெத் ஓவர்களில் எல்லை கோட்டில் இருந்து பீல்டிங் செய்ய விரும்புவேன். அதன் மூலம் அணிக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்த முடியும் என்று நம்புகிறேன். அந்த நேரத்தில் யாரேனும் ஒருவர் என்னுடைய பொறுப்பை மேற் கொள்ள வேண்டும்.
30-35 ஓவர்களுக்கு பின்னர் நான் எல்லை கோட்டுக்கு அருகில் பீல்டிங் செய்ய சென்று விடுவேன் என்று டோனிக்கு தெரியும். பின்னர் என்ன நடக்கும் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். இருவருக்கும் இடையில் அதிக அளவில் நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது.
ஆரம்ப கட்டத்தில் எனக்கு டோனியிடம் இருந்து நிறைய ஆதரவு இருந்தது. 3-வது வரிசையில் விளையாடும் வாய்ப்பு அளித்தவர். நிறைய இளைஞர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். டோனிக்கு நான் பக்கபலமாக செயல்படுவேன். விசுவாசமே எப்போதும் முக்கியத்துவம் பெறும்.
இவ்வாறு கோலி கூறினார்.