X

டோனிக்கு அறிவுரை கூறும் அசாருதீன்

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததில் இருந்தே, அனுபவ வீரரான டோனி கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக, அவரது ஓய்வு குறித்து பலரும் பேசி வருகின்றனர்.

ஆனால், டோனியிடம் இருந்து எவ்வித பதிலும் இன்னும் வெளியாகவில்லை. கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீன் டோனிக்கு சில அறிவுரைகளையும், கோரிக்கையையும் விடுத்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு வீரர் விளையாட விரும்பினால், அவர் எப்படி விளையாடுவார்? என்ன நடக்கும்? என்பதை தேர்வுக் குழுதான் தெளிவாக தெரிவிக்க வேண்டும். சிறந்த வீரர் என்றால், அவர்களும் தங்கள் கருத்தினை தன்னம்பிக்கையுடன் கூற வேண்டும்.

ஏதேனும் ஒரு முடிவு வெளியாகிதான் ஆக வேண்டும். இல்லை என்றால், டோனி ஓய்வு எடுப்பார், எடுக்கமாட்டார் என மாறி மாறி மக்கள் பேசத்தான் செய்வார்கள். ஏனென்றால், டோனியிடம் இருந்து இதற்கெல்லாம் எந்த பதிலும் இன்னும் வரவில்லை.

100% உடல் தகுதி, பேட்டிங் திறமை மாறாமல் அப்படியே இருந்தால் அவர் தொடர்ந்து விளையாடவே விரும்புகிறேன். சில நேரங்களில் அதிகமாக விளையாடிவிட்டால் ஆர்வம் குறையும். அப்படி இல்லை என்றால் விளையாடலாம்.

ஆனால், நான் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே டோனிக்கு விடுக்கிறேன். நீங்கள் விளையாடும்போதெல்லாம் ஆக்ரோஷத்துடன் விளையாட வேண்டும். வயதானால் சில சமயங்களில் ஆட்டம் மந்தமாக இருக்கும். உங்கள் ஆட்டம் அப்படி இல்லை.

உங்கள் இயல்பான ஆட்டத்தால் நிறைய போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. அப்படியே விளையாடினால் அணிக்கு சிறப்பாக அமையும். டோனி, 2 மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு அதற்கு பின்னர் தெளிவான முடிவெடுப்பார் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags: sports news