X

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு வருகிற ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்க உள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கொரோனா இன்னும் கட்டுக்குள் வராத தற்போதைய சூழலில் வெளிநாட்டு ரசிகர்களை ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்க்க அனுமதிக்க வாய்ப்பே இல்லை, இது பற்றி இந்த மாத இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று ஜப்பான் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியதாக அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இதற்கிடையே, ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டுமா? வேண்டாமா? என்று அந்த நாட்டு மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் 58 சதவீதம் பேர் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு 47 சதவீதம் பேர் குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்றும், 44 சதவீதம் பேர் ரசிகர்கள் வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.