X

டோக்கியோ ஒலிம்பிக் கடினமான பணியாகவே இருக்கும் – பி.வி.சிந்து பேட்டி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பேட்மிண்டனில் இருந்து பி.வி.சிந்து, சாய் பிரனீத் மற்றும் இரட்டையர் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோர் தகுதி பெற்று இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மீது இந்த முறையும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் மலேசிய ஓபன், சிங்கப்பூர் ஓபன் ஆகிய போட்டிகள் கொரோனா அச்சத்தால் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டதால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 66 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சர்வதேச போட்டிகள் இல்லாததால் சிந்து தனிப்பட்ட முறையில் தன்னை தீவிரமாக ஆயத்தப்படுத்தி வருகிறார்.

இது குறித்து உலக சாம்பியனான 25 வயதான பி.வி.சிந்து ேநற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்றாக சிங்கப்பூர் ஓபன் இருந்தது. ஆனால் இப்போது அதுவும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் வேறு போட்டிகள் இல்லை. எனவே நான் பயிற்சியின் போது வெவ்வேறு வீராங்கனைகளுடன் விளையாடி என்னை தயார்படுத்துகிறேன். எனது பயிற்சியாளர் பார்க் டா சங் (கொரியா) போட்டிக்குரிய சூழலை உருவாக்கி எனக்கு பயிற்சி அளிக்கிறார்.

ஒவ்வொரு வீராங்கனைகளும் வெவ்வேறு விதமான பாணியில் ஆடுவார்கள். தாய் ஜூ யிங் (சீனதைபே) அல்லது ராட்சனோக் இன்டானோன் (தாய்லாந்து) போன்றவர்கள் வித்தியாசமான ஸ்டைலில் ஆடக்கூடியவர்கள். அந்த வகையிலேயே பார்க் டா சங் என்னை தயார்படுத்துகிறார்.

இந்த ஆண்டில் இதுவரை எல்லாமே நன்றாக அமைந்துள்ளது. ஒரு வீராங்கனையாக முன்னேற்றம் கண்டு வருகிறேன். எனது ஆட்டத்தை அலசி ஆராய்ந்து அதற்கு ஏற்ப பயிற்சியாளர் ஆலோசனை வழங்குகிறார். எனது தந்தையும் எனக்கு உதவிகரமாக இருக்கிறார். ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

தற்போதைய நிலைமையில், போட்டிகள் ரத்து ெசய்யப்படுவது ஒரு வீராங்கனையாக வருத்தம் அளிக்கிறது. ஆனால் அனைவரின் நலன் கருதியே இத்தகைய முடிவு எடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த உலகமும் கொரோனா பரவலால் தவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு விளையாட்டு வீராங்கனை என்பதற்கு முன்பாக நாம் எல்லாம் மனிதர்கள். வாழ்க்கை தான் முதலில் முக்கியம். ஒரு வேளை சில போட்டிகள் நடந்தாலும் அதில் முழு பாதுகாப்பு இருக்குமா என்பது தெரியாது. போட்டி பாதுகாப்பாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் எதிலும் உறுதி கிடையாது. வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்பது நமக்கு தெரியாது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் அமைத்தாலும், நாம் மிக கவனமுடன் இருக்க வேண்டி உள்ளது.

ஒவ்வொரு நாடுகளிலும் தனித்தனி கொரோனா தடுப்பு விதிமுறைகள் உள்ளன. தாய்லாந்து போட்டியின் போது 2-3 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்தனர். ஆல்-இங்கிலாந்து தொடரின் போது, விமானத்தில் வந்தவர்களில் யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு என்றாலும் அந்த அணியையே போட்டியில் இருந்து விலக்கினர். ஆனால் நாம் இவற்றை சமாளித்து தான் ஆக வேண்டும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் கூட ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை செய்ய இருப்பதாக கேள்விப்படுகிறேன். அதுமட்டுமின்றி இந்தியாவில் இருந்து கிளம்பும் போது கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது. அதன் பிறகு அங்கு சென்றதும் இன்னொரு பரிசோதனை. நிச்சயம் இது கடினமான பணி தான்.

சில சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் தவறான கொரோனா முடிவுகள் வந்தன. ஆனால் இது ஒலிம்பிக் விளையாட்டு. இதில் அத்தகைய தவறுகள் நடக்காத வகையில் மிகவும் கவனமுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சிந்து கூறினார்.