Tamilவிளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் – இந்திய நீச்சல் வீரர் ஸ்ரீஹரி தகுதி

இத்தாலி தலைநகர் ரோமில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று சர்வதேச நீச்சல் போட்டி நடந்தது. இதன் கடைசி நாளில் தனியாக நடத்தப்பட்ட தகுதி நேர போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 53.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

அத்துடன் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ‘ஏ’ தர தகுதி இலக்கையும் (53.85 வினாடி) எட்டினார். இதர போட்டியாளர்கள் இன்றி நடைபெறும் தகுதி நேர போட்டியில் இலக்கை எட்டுபவர்களுக்கு சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் அங்கீகாரம் அவசியமானதாகும். ஸ்ரீஹரி நடராஜனின் தகுதி நேரத்துக்கு சர்வதேச நீச்சல் சம்மேளனம் நேற்று அதிகாரபூர்வமாக அங்கீகாரம் அளித்தது. இதனை தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த 20 வயதான ஸ்ரீஹரி நடராஜ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் 2-வது இந்திய நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் ஆவார். ஏற்கனவே கேரளாவை சேர்ந்த 27 வயதான சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் தகுதி பெற்று சாதித்து இருந்தார்.