Tamilசெய்திகள்

டோக்கியோவில் இருந்து வெளியேறும் குடும்பங்களுக்கு நிதி உதவி – மக்கள் தொகையை குறைக்க ஜப்பான் புதிய நடவடிக்கை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 3½ கோடி பேர் வசித்து வருகிறார்கள். இதனால் மற்ற நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ளது. நாட்டின் கிராம புறங்களில் மக்கள் தொகை குறைந்தபடி இருந்ததால் அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஒரு திட்டத்தை தொடங்கியது. அதில் தலைநகர் டோக்கியோவில் இருந்து கிராம புறங்களுக்கு இடம் பெயர்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் 2019-ம் ஆண்டு 71 பேரும், 2020-ம் ஆண்டு 290 பேரும் மட்டுமே இடம் பெயர்ந்தனர். கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் 1184 குடும்பங்கள் பயனடைந்தனர்.

இந்த நிலையில் தலைநகர் டோக்கியோவில் இருந்து வெளியேறும் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தலா ஒரு மில்லியன் யான் பணம் (இந்திய மதிப்பில் ரூ.6.33 லட்சம்) வழங்கப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்து உள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் டோக்கியோவில் இருந்து வெளியேறினால் 3 மில்லியன் யான் பணம் பெறலாம். மத்திய டோக்கியோ பகுதியில் இருந்து 5 ஆண்டுகளாக வசித்த குடும்பங்கள் நிதியுதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேலையில் இந்த நிதியுதவியை பெற விரும்பும் குடும்பங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டு காலம் இடம் பெயர்ந்த புதிய வீட்டில் வசிக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு உறுப்பினர் வேலையில் இருக்க வேண்டும். அல்லது புதிய வணிகத்தை தொடங்க திட்டமிட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் குடும்பங்கள் உள்ளூர் பகுதியில் தொழில் தொடங்க விரும்பினால் கூடுதல் உதவியும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் 2027-ம் ஆண்டுக்குள் டோக்கியோவில் இருந்து 10 ஆயிரம் பேர் கிராம புறங்களுக்கு செல்வார்கள் என்று அரசு நம்புகிறது.

அதிகமாக இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக நகரங்களுக்கு வருவதால் ஜப்பானின் கிராம புறங்களில் சமீபத்திய ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்து உள்ளது. இந்த கவர்ச்சிகரமான ஊக்க தொகை மூலம் கிராமப் புறங்கள் புத்துயிர் பெற ஊக்குவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே டோக்கியோவில் இருந்து இடம் பெயந்தவர்களுக்கு குறைந்த நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.