Tamilசெய்திகள்

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மனித எச்சங்கள் மீட்பு – அமெரிக்க கடலோர காவல்படை அறிவிப்பு

ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு சென்றது.

வட அட்லாண்டிக் கடலின் கேப் கோட் எனும் இடத்திலிருந்து, கிழக்கே 900 மைல் தொலைவில் சுமார் 13,000 அடி ஆழத்தில், அதனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது. நீண்ட தேடுதலுக்கு பின், துரதிர்ஷ்டவசமாக, அது வெடித்து சிதறியதாகவும், இதில் பயணித்த அனைவரும் பலியானார்கள் எனவும் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த பயங்கர விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்படை விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித எச்சங்களை மீட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடரில் உள்ள துறைமுகத்திற்கு திரும்புவது நீர்மூழ்கிக் கப்பல் ஏன் வெடித்தது என்பதற்கான விசாரணையின் முக்கிய பகுதியாகும் என தெரிவித்தது.