Tamilவிளையாட்டு

டேவிஸ் கோப்பை டென்னிஸ் – இந்தியா, பாகிஸ்தான் இன்று மோதல்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டி முதலில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் அங்கு சென்று விளையாட முடியாது என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் இந்த போட்டி கஜகஸ்தானுக்கு மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் செய்த அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது. நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு இந்த போட்டி இன்று தொடங்குகிறது. பாகிஸ்தானில் இருந்து போட்டி மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் முன்னணி வீரர்கள் அய்சம் உல்-ஹக் குரேஷி, அகீல் கான் ஆகியோர் விலகினார்கள். இதனால் இளம் வீரர்களுடன் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் களம் காணுகிறது.

இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் ராமநாதன், பாகிஸ்தான் வீரர் முகமது சோகைப்பையும், மற்றொரு இந்திய வீரர் சுமித் நாகல், பாகிஸ்தான் வீரர் ஹூஜய்பா அப்துல் ரகுமானையும் எதிர்கொள்கிறார்கள். 17 வயதான முகமது சோகைப் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பிரதான சுற்றில் ஒரு வெற்றி கூட பெற்றதில்லை. ஹூஜய்பா அப்துல் ரகுமான் ஜூனியர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நாளை நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் ஹூஜய்பா அப்துல் ரகுமான்-முகமது சோகைப் இணையை சந்திக்கிறது. ஜீவன் நெடுஞ்செழியன் டேவிஸ் கோப்பை போட்டியில் அறிமுக வீரராக களம் காணுகிறார். சென்னையை சேர்ந்த இடக்கை வீரரான ஜீவன் நெடுஞ்செழியன் டேவிஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 75-வது இந்திய வீரர் ஆவார். மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல்-முகமது சோகைப், ராம்குமார் -ஹூஜய்பா அப்துல் ரகுமான் ஆகியோர் மோதுகிறார்கள்.

இந்த போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று குரோஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் உலக குரூப் தகுதி சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கும், 2-வது நாள் ஆட்டம் காலை 11.30 மணிக்கும் தொடங்குகிறது.

இதற்கிடையே கேப்டன் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்ட இந்திய முன்னாள் கேப்டன் மகேஷ் பூபதி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே எப்பொழுதும் பதற்றமான நிலை தான் நிலவுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பெரிய அணிகள் எதுவும் அங்கு செல்லவில்லை. ஆனால் இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் செல்லும் என்று தடாலடியாக அறிவித்தனர். இந்த விவகாரத்தில் இந்திய டென்னிஸ் அணி வீரர்கள் எடுத்த முடிவை விமர்சிப்பது நியாயமற்றது. நான் இந்திய அணி வீரர்களுடன் தினசரி தொடர்பில் தான் இருக்கிறேன். அகில இந்திய டென்னிஸ் சங்கம் என்னை கையாண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் புதிய கேப்டனை இந்திய அணிக்கு கொண்டு வர விரும்புகிறோம் என்று என்னிடம் வெளிப்படையாக தெரிவித்து இருக்கலாம். அவர்கள் அப்படி தெரிவித்து இருந்தால் நான் அதனை மதித்து இருப்பேன். இதுவரை எனக்கு அகில இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகிகளிடம் இருந்து எந்த டெலிபோன் அழைப்பும் வரவில்லை.

இந்திய அணியில் இருந்து வெளியேற இது சரியான நேரம் என்று நான் நினைக்கவில்லை. அகில இந்திய டென்னிஸ் சங்கம் என்னை மட்டும் இப்படி நடத்தவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக எல்லா வீரர்களையும் இப்படி தான் நடத்தி வருகிறது. இதனால் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனாலும் இந்த செயல் என்னை காயப்படுத்தியது.

பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்று மறுத்தபோது அணியினருக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஆதரவு அளிக்காததும், மத்திய அரசு எதுவும் சொல்லாததும் நியாயமற்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு என்ன நடந்தது என்பது முக்கியமல்ல. இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்பது தான் முக்கியமானதாகும். எங்கு போட்டி நடந்தாலும் இந்திய அணியால் பாகிஸ்தானை வெல்ல முடியும்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *