X

’டேனி’- திரைப்பட விமர்சனம்

பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் ‘டேனி’. ஒடிடி தளமான ZEE5-ல் இன்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி என்பதை பார்க்கலாம்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், விவசாய நிலத்தில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியான வரலட்சுமியின் தங்கையும் எரித்துக் கொலை செய்யப்பட, இந்த கொலைகளின் பின்னணி மற்றும் கொலையாளி யார்? என்பதை வரலட்சுமி எப்படி கண்டுபிடிக்கிறார், அவருக்கு ‘டேனி’ என்ற போலீஸ் நாய் எப்படி உதவி செய்கிறது, என்பது தான் படத்தின் கதை.

சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலே கதைக்களம் சிட்டியை மையப்படுத்தியதாக இருக்கும். ஆனால், கிராமத்தை கதைக்களமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது, பிற சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் இருந்து முழுவதுமாக வித்தியாசப்படுகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வரலட்சுமி, இயல்பாகவே கம்பீரமான தோற்றம் கொண்டவர் என்பதால் அவருக்கு காக்கி உடை கச்சிதமாக பொருந்துவதோடு, போலீஸ் வேடத்திலும், நடிப்பிலும் எந்தவித குறையும் இல்லாமல், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தஞ்சை மக்களுக்கே உரித்தான ஸ்டைலில் தனது கதாப்பாத்திரத்தை கையாண்டுள்ளார். எப்படிப்பட்ட பயங்கரமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அதை காவல் துறையினர் எப்படி சாதாரணமாக கையாளுகிறார்கள் என்பதை தனது நடிப்பு மூலம் வெளிப்படுத்தியிருக்கும் துரை சுதாகர், கச்சிதமான நடிப்பால் கவர்கிறார்.

டேனி என்ற பெயரில் வலம் வரும் நாய்க்கு தலைப்பில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படத்தில் இல்லை. டேனியை பராமரிப்பவராக நடித்திருக்கும் கவின், அவரது அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கிராமத்தை சுற்றி நடக்கும் கதை என்பதால் படம் ரொம்பவே எளிமையாக இருக்கிறது. அதே சமயம் இயல்பாகவும் இருக்கிறது. கொலைக்கான காரணமும், கொலையாளியின் பின்னணியையும் விவரிக்கும் இயக்குநர் அதன் மூலம் சொல்ல வரும் மெசஜை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இருந்தாலும், அவர் சொல்லியிருக்கும் மெசஜ் மிக முக்கியமானது.

காவல் துறையில் இருக்கும் நாய்களுக்கு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பதவிகள் இருப்பதோடு, ஊதியமும் வழங்கப்படுகிறது, என பல சுவாரஸ்ய தகவல்களை இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

சாய் பாஸ்கரன் இசை, பி.ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவு, எஸ்.என்.பாசிலின் படத்தொகுப்பு அனைத்தும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும்? என்ற எதிர்ப்பார்ப்பால் முதல் பாதி படம் சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், கொலையாளி அறிமுகத்திற்குப் பிறகு திரைக்கதையின் வேகம் சற்று குறைகிறது. பிறகு கொலைக்கான காரணத்தை விவரிப்பதில் மீண்டும் திரைக்கதை சூடு பிடிக்க, இறுதியில் இதுபோன்ற குற்றங்கள் செய்பவர்களுக்கு, இயக்குநர் கொடுக்கும் தண்டனை, மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

மொத்தத்தில், ’டேனி’ சூப்பரான படம் இல்லை என்றாலும், சுமார் என்பதற்கு ஒருபடி மேல் என்று சொல்லும் படமாக உள்ளது.

ரேட்டிங் 3.5