டெஸ்ட் போட்டீல் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவார் – ரகானே நம்பிக்கை

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரகானே மும்பையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக இறங்குவாரா? என்பது குறித்து எனக்கு இன்னும் தெரியாது. அவர் தொடக்க வீரராக இறங்கினால், எனக்கு மகிழ்ச்சி தான். வெஸ்ட் இண்டீசில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, ரோகித் சர்மா போன்ற திறமையான வீரரை வெளியே உட்கார வைத்தது கடினமாக இருந்ததாக சொல்லியிருந்தேன். அவர் கடினமாக உழைத்து வருகிறார். மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவர் நன்றாக செயல்படுவார்.

ரோகித் சர்மாவிடம் சிறப்பு வாய்ந்த திறமை இருப்பதை நாங்கள் அறிவோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பது என்பது மனநிலையை சார்ந்த விஷயம் ஆகும். ஒரு நாள் கிரிக்கெட்டில் இறங்கும்போது, நம் திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாட வேண்டியது தான். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில நேரம் இரண்டு பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால், வழக்கமான ஆட்ட பாணியை கைவிட்டு அவசரப்படாமல் சுதாரித்து கொள்ள வேண்டும். அத்தகைய பந்து வீச்சை சமாளித்து, அதன் பிறகு உங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் நான் உண்மையிலேயே உற்சாகமாக அனுபவித்து விளையாடுகிறேன். மீண்டும் ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்ப விரும்புகிறேன். ஆனால் இப்போதைக்கு தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் மீதே முழு கவனமும் உள்ளது.

இவ்வாறு ரகானே கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news