சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நம்பர் ஒன் இடத்தை இழந்து இருக்கிறார்.
முழங்கை காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாடாததால் 9 புள்ளிகளை பறிகொடுத்த வில்லியம்சன் (886 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (891 புள்ளி) மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறினார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் (878 புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சோபிக்காத இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (797 புள்ளி) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (814 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்திய வீரர்கள் ரிஷாப் பண்ட், ரோகித் சர்மா (தலா 747 புள்ளி) கூட்டாக 6-வது இடத்தில் தொடருகின்றனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (908 புள்ளி) முதலிடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (850 புள்ளி) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (412 புள்ளி) முதலிடத்திலும், இ்ந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (386 புள்ளி) 2-வது இடத்திலும், ஆர்.அஸ்வின் (353 புள்ளி) 4-வது இடத்திலும் தொடருகின்றனர்.