Tamilவிளையாட்டு

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை – புஜாரா முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார். அபுதாபியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 89, 139 ரன்கள் வீதம் எடுத்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்ட வில்லியம்சன் 37 புள்ளிகளை சேகரித்து தனது ஒட்டுமொத்த புள்ளி எண்ணிக்கையை 913 ஆக உயர்த்தி இருக்கிறார்.

நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஒருவர் 900 புள்ளிகளுக்கு மேல் குவித்து இருப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் உலக அளவில் இந்த மைல்கல்லை கடந்த 32-வது பேட்ஸ்மேன் ஆவார். நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் வில்லியம்சன் புதிய உச்சத்தை எட்டியிருந்தாலும், அந்த நாட்டில் இருந்து ஏற்கனவே ஒரு பந்து வீச்சாளர், பவுலிங் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்திருக்கிறார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லீ 1985-ம் ஆண்டு 909 புள்ளிகளை பெற்று இருந்தது நினைவு கூரத்தக்கது.

வில்லியம்சனின் முன்னேற்றம் இந்திய கேப்டன் விராட் கோலியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது. அடிலெய்டு டெஸ்டில் விராட் கோலி பெரிய அளவில் சோபிக்கவில்லை. இரண்டு இன்னிங்சிலும் முறையே 3, 34 ரன்கள் வீதமே எடுத்தார். இதன் மூலம் 15 புள்ளிகளை பறிகொடுத்த கோலி, தற்போது 920 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் கோலி கணிசமான ரன் குவித்தால் மட்டுமே ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைக்க முடியும். இல்லாவிட்டால் முதலிடத்தை இழக்க நேரிடும். அவருக்கும், 2-வது இடத்தில் உள்ள வில்லியம்சனுக்கும் இடையே 7 புள்ளி மட்டுமே வித்தியாசம் உள்ளது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்து வரும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் ஒரு இடம் இறங்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அடிலெய்டு டெஸ்டில் சதமும் (123 ரன்), அரைசதமும் (71 ரன்) நொறுக்கி இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு வழிவகுத்த புஜாரா, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோரை முந்தி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த மெச்சத்தகுந்த பேட்டிங்கின் மூலம் 81 புள்ளிகளை திரட்டிய புஜாரா மொத்தம் 846 புள்ளிகள் எடுத்திருக்கிறார்.

இதே போல் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 126 ரன்கள் விளாசிய நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் தனது வாழ்க்கையில் முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் 17-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு வந்துள்ளார். இந்தியாவின் ரஹானே 17-வது இடத்திலும் (2 இடம் உயர்வு), ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 13-வது இடத்திலும் (3 இடம் சறுக்கல்) உள்ளனர்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 2 இடங்களில் தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் ஏற்றம் கண்டு 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதே போல் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 இடங்கள் எகிறி 33-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அள்ளிய போதிலும் அவரது தரவரிசையில் மாற்றமில்லை. ஆனாலும் 19 புள்ளிகள் கூடுதலாக சேகரித்து 725 புள்ளிகளுடன் 14-வது இடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றம் இல்லை. வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, தென்ஆப்பிரிக்காவின் வெரோன் பிலாண்டர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *