‘பாக்சிங் டே’ நாளில் தொடங்கி நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு கிடைத்தது. மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவிடம் 3-வது நாளிலேயே ‘சரண்’ அடைந்தது. நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஊதித்தள்ளியது.
இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-6 இடங்களில் மாற்றம் ஏதுமில்லை. இந்திய கேப்டன் விராட் கோலி (931 புள்ளி) முதலிடத்தில் கம்பீரமாக நீடிக்கிறார். அவர் கடந்த 135 நாட்களாக ‘நம்பர் ஒன்’ அரியணையை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார். 2 முதல் 6 இடங்களில் முறையே நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் (897 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (883 புள்ளி), இந்தியாவின் புஜாரா (834 புள்ளி), இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (807 புள்ளி), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (780 புள்ளி) ஆகியோர் உள்ளனர். மெல்போர்ன் டெஸ்டில் செஞ்சுரி அடித்த புஜாராவுக்கு 18 புள்ளிகள் கூடுதலாக கிடைத்த போதிலும் அவரது வரிசையில் மாற்றம் இல்லை.
இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சதங்கள் விளாசிய நியூசிலாந்து வீரர்கள் ஹென்றி நிகோல்ஸ் 2 இடம் முன்னேறி 7-வது இடத்தையும், டாம் லாதம் 8 இடங்கள் எகிறி 14-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் அறிமுகமாகி 76 மற்றும் 42 ரன்கள் வீதம் எடுத்த இந்திய வீரர் மயங்க் அகர்வால், டெஸ்ட் தரவரிசையில் 67-வது இடத்துடன் தனது பயணத்தை தொடங்குகிறார். இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 10 இடங்கள் உயர்ந்து 38-வது இடத்துக்கு வந்துள்ளார். அதே சமயம் துணை கேப்டன் ரஹானே 3 இடங்கள் சரிந்து 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா (880 புள்ளி), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (874 புள்ளி) மாற்றமின்றி டாப்-2 பவுலர்களாக திகழ்கிறார்கள். மெல்போர்னில் இந்தியாவுக்கு எதிராக 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (836 புள்ளி) 5 இடங்கள் ஏற்றம் கண்டு 3-வது இடத்தை வசப்படுத்தியுள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கையை நிலைகுலைய வைத்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 14-வது இடத்தில் இருந்து 7-வது இடத்தை எட்டியிருக்கிறார். நியூசிலாந்தின் டிம் சவுதி 2 இடம் அதிகரித்து 9-வது இடத்தை பெற்றுள்ளார்.
இதே போல் மெல்போர்ன் டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கபளகரம் செய்து ஆட்டநாயகனாக ஜொலித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 28-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கு வந்துள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் இப்போது சிறந்த தரவரிசையை பெற்றிருப்பது இவர் தான். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 23-வது இடத்தில் இருக்கிறார். அதே சமயம் நமது சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் கொஞ்சம் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஜடேஜா ஒரு இடம் குறைந்து 6-வது இடத்திலும், அஸ்வின் 2 இடம் தளர்ந்து 8-வது இடத்திலும் உள்ளனர். மெல்போர்னில் சோடை போன ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 7 இடங்களை பறிகொடுத்து 14-வது இடத்துக்கு பின்தங்கினார்.
டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் இந்தியா (116 புள்ளி), இங்கிலாந்து (108 புள்ளி), நியூசிலாந்து (107), தென்ஆப்பிரிக்கா (106), ஆஸ்திரேலியா (102) ஆகிய அணிகள் உள்ளன.