ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளைமறுநாள் (6-ந்தேதி) அடிலெய்டில் தொடங்குகிறது. சிறந்த பேட்ஸ்மேன்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா பலவீனமாக காணப்படுகிறது. இந்த முறை இந்தியா தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலியாவை பலவீனமடைந்த அணி என்று கூறிவிட முடியாது என்று இந்திய அணியின் துணைக்கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரகானே கூறுகையில், “எந்த அணியும் அதன் சொந்த மண்ணில் விளையாடும்போது, அவர்கள் சிறந்த அணியாகத்தான் திகழ்வார்கள் என்று உணர்கிறேன். ஆஸ்திரேலியா இன்னும் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்.
நாங்கள் எப்போதுமே எதிரணியை எளிதாக எடுத்துக் கொண்டு விளையாடுவதில்லை. அவர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோரை இழந்திருக்கிறார்கள். என்றாலும், ஆஸ்திரேலியா அணி பலவீனமானது என்று நான் கருதவில்லை.
அவர்களுடைய பந்து வீச்சு யூனிட்டை பார்த்தீர்கள் என்றால், மிகவும் அசுர பலம் கொண்டது. இந்திய அணி தொடரை வெல்ல வேண்டும் என்றால், பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே, ஆஸ்திரேலியா இன்னும் தொடரை கைப்பற்றுவதற்கு வாய்ப்புள்ள அணியாகவே கருதுகிறேன்.
ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டால், சிறந்ததாக உணர்வீர்கள். இது அணிகளாக ஒன்று சேர்ந்து விளையாடும் போட்டி. ஒவ்வொருவரும் அணிக்காக பேட்டிங்கில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். முக்கியமான விஷயம், நீண்ட பார்ட்னர்ஷிப். இது ஆஸ்திரேலியா மண்ணில் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.” என்றார்.