டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறிய பும்ரா
யார்க்கர் என்றாலே சமீப கால கிரிக்கெட்டில் நினைவுக்கு வரும் பந்து வீச்சாளர் யார் என்றால் அது மலிங்காதான். அதன்பின் பும்ரா சிறந்த யார்க்கர் பந்து வீச்சாளராக உருவானார். ஒருநாள் மட்டும் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்த பும்ரா, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கேப் டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார்.
அதன்பின் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் விளையாடிய பும்ரா விக்கெட்டுக்களை அள்ளினார். பும்ராவால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீச முடியுமா? என்று கேள்வி கேட்டவர்களுக்கு தனது பந்து வீச்சு மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.
நேற்றுடன் முடிவடைந்த ஜமைக்கா டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தற்போது வரை 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 62 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். ஐசிசி-யின் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 85-வது இடத்தில் இருந்து தனது டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கினார்.
தற்போது 21 மாதத்திற்குள் 12 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி 3-வது இடத்திற்கு முன்னேறினார். ஜமைக்கா டெஸ்டுக்கு முன் 7-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.