X

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – ஜோ ரூட் 2வது இடத்திற்கு முன்னேற்றம்

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதேபோல் கிங்ஸ்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. அதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 180 ரன்னும், 2-வது இன்னிங்சில் 33 ரன்னும் எடுத்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 2-வது இடத்தை பிடித்துள்ளார். சதத்தின் மூலம் 45 புள்ளிகளை கூடுதலாக சேகரித்துள்ள அவர் மொத்தம் 893 புள்ளிகளுடன் இந்த உயர்வை கண்டுள்ளார். இந்தப் போட்டி தொடரிலேயே ஜோ ரூட் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன் ஆகியோர் முறையே ஒரு இடம் சறுக்கி 3-வது, 4-வது இடத்தை பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 15 புள்ளிகளை இழந்தாலும் 5-வது இடத்தில் நீடிக்கிறார். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 7 புள்ளிகளை அதிகரித்து 6-வது இடத்திலும், இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 10 புள்ளிகள் குறைந்து 7-வது இடத்திலும் தொடருகின்றனர்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முறையே 30, 55 ரன்களை சேர்த்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 2 இடம் உயர்ந்து 8-வது இடத்தை பிடித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 9-வது இடத்துக்கும், தென்ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக் 10-வது இடத்துக்கும் சறுக்கி உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ஆர்.அஷ்வின் (இந்தியா), டிம் சவுதி (நியூசிலாந்து), ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா), நீல் வாக்னெர் (நியூசிலாந்து) ஆகியோர் முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் உயர்ந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா) ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தை பெற்றுள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 8-வது இடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் 2 இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 10-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட்இண்டீஸ்) முதலிடத்தில் நீடிக்கிறார். பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) 2-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். ரவீந்திர ஜடேஜா (இந்தியா) 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். ஆர்.அஷ்வின் (இந்தியா) 4-வது இடத்தில் நீடிக்கிறார்.