டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டது இந்தியா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்தியாவை விட ஒரு புள்ளி குறைவாக பெற்றிருக்கும் நியூசிலாந்து இரண்டாவது இடம் வகிக்கிறது.
இந்நிலையில், டெஸ்ட் அணிகள் தரவரிசையில் தொடர்ந்து நம்பர் ஒன் ஆக வலம் வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:
நம்பர் ஒன் மகுடத்தை சூடுவதற்கு மனஉறுதிமிக்க போராட்டமும் இலக்கை நோக்கி நிலையான முழு கவனமும் தேவை. இவற்றை தற்போதைய இந்திய அணி செய்து காட்டியுள்ளது. நம்பர் ஒன் இடத்துக்கும், பாராட்டுக்கும் இந்திய வீரர்கள் தகுதியானவர்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான விதிமுறைகளில் பாதியில் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஒவ்வொரு தடைகளையும் இந்திய அணி வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறது. கடினமான நேரத்தில் நமது வீரர்கள் கடினமான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார்கள். அவர்களை நினைத்து சூப்பராக பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.