தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த தொடரில் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவரைவிட 1 புள்ளி மட்டுமே பின்தங்கி இருந்த இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மீண்டும் முதலிடத்தை எட்டுவதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்சில் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அவர் 12 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இதனால் 10 புள்ளிகளை இழந்துள்ள கோலி 2-வது இடத்தில் தொடருகிறார்.
இந்த டெஸ்டில் 212 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்திய இந்திய வீரர் ரோகித் சர்மா கிடுகிடுவென 12 இடங்கள் எகிறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன்பாக 44-வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா இந்த தொடரில் மொத்தம் 529 ரன்கள் குவித்ததன் மூலம் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளார்.
இதன் மூலம் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் டாப்-10 இடத்திற்குள் நுழைந்த 3-வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 2-வது இடத்திலும் (2018-ம் ஆண்டு பிப்ரவரி), சர்வதேச 20 ஓவர் போட்டியில் 7-வது இடத்திலும் (2018-ம் ஆண்டு நவம்பர்) இருந்துள்ளார். விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்து இருக்கிறார். ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் டெஸ்ட், 20 ஓவர் போட்டியில் முதலிடத்திலும், ஒரு நாள் போட்டியில் 8-வது இடத்திலும் இருந்துள்ளார்.
ராஞ்சி டெஸ்டில் 115 ரன்கள் விளாசிய இந்திய துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 4 இடங்கள் உயர்ந்து 5-வது இடத்துக்கு வந்துள்ளார். புஜாரா 4-வது இடத்திலும், மயங்க் அகர்வால் 18-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள். காயத்தால் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை தவற விட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 3-ல் இருந்து 4-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். கடைசி டெஸ்டில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 இடங்கள் சறுக்கி 10-வது இடத்துக்கு சரிந்துள்ளார். மற்ற இந்திய பவுலர்கள் முகமது ஷமி 15-வது இடத்திலும் (ஒரு இடம் அதிகரிப்பு), உமேஷ் யாதவ் 24-வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு) இருக்கிறார்கள்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் முதலிடமும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2-வது இடமும் வகிக்கிறார்கள். அஸ்வின் ஒரு இடம் பின்தங்கி 6-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.
அணிகளின் தரவரிசையில் இந்தியா நம்பர் ஒன் இடத்தில் கம்பீரமாக பயணிக்கிறது. தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றியதன் மூலம் கூடுதலாக 5 புள்ளிகளை பெற்ற இந்தியா மொத்தம் 119 புள்ளிகளுடன் இருக்கிறது. அதே சமயம் தொடரை பறிகொடுத்ததால் 7 புள்ளிகளை இழந்துள்ள தென்ஆப்பிரிக்கா 102 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. நியூசிலாந்து 2-வது இடத்திலும் (109 புள்ளி), இங்கிலாந்து 3-வது இடத்திலும் (104 புள்ளி), ஆஸ்திரேலியா 5-வது இடத்திலும் (99 புள்ளி) உள்ளன.