Tamilவிளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – பும்ரா முன்னேற்றம்

லண்டன் ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. 4-வது டெஸ்டில் சோபிக்காத இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 13 புள்ளிகளை இழந்தாலும் 903 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (901 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித் (891 புள்ளிகள்), லபுஸ்சேன் (878 புள்ளிகள்) முறையே 3-வது, 4-வது இடத்திலும் தொடருகின்றனர். 2-வது இன்னிங்சில் சதம் அடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (813 புள்ளிகள்) 40 புள்ளிகள் அதிகரித்து 5-வது இடத்திலும், இந்திய அணி கேப்டன் விராட்கோலி (783 புள்ளிகள்) 10 புள்ளிகள் உயர்ந்து 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர். இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் 59 இடங்கள் முன்னேறி 79-வது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் 4 விக்கெட் வீழ்த்தியதன் பலனாக 7 இடங்கள் உயர்ந்து பவுலிங் தரவரிசையில் 49-வது இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து வீரர் ஆலி போப் முதல் இன்னிங்சில் 82 ரன்கள் எடுத்ததால் 9 இடங்கள் முன்னேறி 49-வது இடத்தை அடைந்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ஆர்.அஸ்வின் (இந்தியா), டிம் சவுதி (நியூசிலாந்து), ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 இடங்கள் சரிந்து 7-வது இடத்துக்கு பின்தங்கினார். நீல் வாக்னெர் (நியூசிலாந்து), காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா) தலா ஒரு இடம் முன்னேறி முறையே 5-வது, 6-வது இடத்தை பிடித்துள்ளனர். ஷகீன் அப்ரிடி (பாகிஸ்தான்) 8-வது இடத்தில் தொடருகிறார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் ஏற்றம் கண்டு 9-வது இடத்தை பிடித்து இருக்கிறார். ஜாசன் ஹேல்டர் (வெஸ்ட்இண்டீஸ்) 10-வது இடத்துக்கு சறுக்கி உள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட்இண்டீஸ்), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ரவீந்திர ஜடேஜா (இந்தியா) முறையே முதல் 3 இடங்களில் மாற்றமின்றி நீடிக்கின்றனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தை பெற்றுள்ளார். வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் ஒரு இடம் முன்னேறி 4-வது இடம் பிடித்து இருக்கிறார். இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 2 இடம் உயர்ந்து 9-வது இடத்தை தனதாக்கி இருக்கிறார்.