டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் விரைவாக கடந்த புஜாரா
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்தன. இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இந்தியாவுக்கு 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி இன்று 5வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 41 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 73 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அதன்பின்னர் தொடர்ந்து ஆடிய புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் 27வது அரை சதத்தை நிறைவு செய்தார்.
அத்துடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்கள் என்ற இலக்கையும் எட்டினார். 134 இன்னிங்ஸ்கள் விளையாடி இந்த இலக்கை அவர் எட்டி உள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த 11வது இந்திய வீரராக புஜாரா இணைந்துள்ளார். இதற்கு முன்பு சச்சின், ராகுல் டிராவிட், கவாஸ்கர், விவிஎஸ் லட்சுமண், கங்குலி, அசாருதீன், விராட் கோலி, சேவாக், திலிப் வெங்கர்ச்சார், குண்டப்பா விஸ்வநாத் ஆகியோர் இந்த இலக்கை எட்டியிருந்தனர். அத்துடன், விரைவாக 6000 ரன்கள் கடந்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும் புஜாரா பெற்றுள்ளார்.
ராகுல் டிராவிட்டும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில்தான் 6000 ரன்கள் என்ற இலக்கை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.