டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோ ரூட்டுக்கு லக்‌ஷ்மன், வாகன் பாராட்டு

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 141 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது.

9 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 285 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் குவித்தார். இதனைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் சதம் அடித்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி கேப்டனாக இருந்த அலஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆவார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த ஜோ ரூட்டிற்கு, இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools