டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வின்!

இங்கிலாந்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வினின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவர் 61 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் புதிய சாதனை படைத்தார். 34 வயதான அவருக்கு இந்த போட்டி 75-வது டெஸ்டாகும். 75 டெஸ்டில் அஸ்வின் 386 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் 75 டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஸ்டெய்னை முந்தினார். ஸ்டெய்ன் 75 டெஸ்டில் 383 (142 இன்னிங்ஸ்) விக்கெட் கைப்பற்றி இருந்தார். அஸ்வின் 140 இன்னிங்சில் 386 விக்கெட்டை தொட்டார்.

இலங்கையை சேர்ந்த முரளீதரன் 75-வது டெஸ்டில் 420 விக்கெட்டை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை அஸ்வின் பிடித்து சாதித்தார்.

அஸ்வின் 28-வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். இதன்மூலம் 75 டெஸ்டில் அதிகமுறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர்களில் இலங்கையை சேர்ந்த ஹெராத்துடன் இணைந்து 3-வது இடத்தை பிடித்தார். முரளீதரன் 75 டெஸ்டில் 35 முறையும், ரிச்சர்டு ஹேட்லி (நியூசிலாந்து) 33 முறையும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர்.

அஸ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். ஏற்கனவே மும்பை, ஐதராபாத், டெல்லி ஆகிய மைதானங்களில் 3 தடவை 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தி இருந்தார்.

அஸ்வின் ஆட்டத்தின் முதல் பந்திலேயே இங்கிலாந்து தொடக்க வீரரை பர்ன்ஸ்சை அவுட் செய்தார். இதன் மூலம் 100 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன்பு 1907-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெர்ட் ஓக்ளர் என்ற சுழற்பந்து வீரர் ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools