சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 5 இடங்களில் ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), வில்லியம்சன் (நியூசிலாந்து), லபுஸ்சேன் (ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து) மாற்றமின்றி தொடருகிறார்கள். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 96 ரன்கள் விளாசிய தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 2 இடங்கள் அதிகரித்து மீண்டும் டாப்-10 இடத்திற்குள் நுழைந்து 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் கம்மின்சும் (ஆஸ்திரேலியா), 2-வது இடத்தில் அஸ்வினும் (இந்தியா), 3-வது இடத்தில் நியூசிலாந்தின் டிம் சவுதியும் நீடிக்கிறார்கள். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்துக்கு வந்துள்ளார். இதே டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த தென்ஆப்பிரிக்க சுழற்பந்து கேஷவ் மகராஜ் 3 இடங்கள் உயர்ந்து 28-வது இடத்தை பெற்றுள்ளார்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் இதுவரை முதலிடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் சோபிக்க தவறியதால் 28 புள்ளிகளை இழந்து மொத்தம் 384 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு சரிந்துள்ளார். இதனால் 2-வது இடத்தில் இருந்த இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (386 புள்ளி) மறுபடியும் முதலிட அரியணையில் ஏறியுள்ளார். ஜடேஜா கடைசியாக 2017-ம் ஆண்டு ஆகஸ்டில் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக வலம் வந்தார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (377 புள்ளி) 3-வது இடத்திலும், இந்தியாவின் அஸ்வின் (353 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளனர்.