தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல், துப்பாக்கி சூடு, தீ வைத்தல் போன்ற வன்முறை சம்பவங்களில் 42 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மவுஜ்பூரில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், டெல்லி வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 885 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,
பொதுமக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.