Tamilசெய்திகள்

டெல்லி மேல்சபை தேர்தல் – ப.சிதம்பரம் திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்

டெல்லி மேல்சபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு இடத்துக்கு காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியது. வாய்ப்பு கேட்டு பலரும் காய்நகர்த்தி வந்தார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ம், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் இந்த ரேசில் முன்னணியில் இருந்தனர்.

ப.சிதம்பரத்துக்கும் எம்.பி. பதவி நிறைவடைவதால் அவருக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் இருந்தே பேச்சு அடிபட்டது. பாராளுமன்றத்தில் பொருளாதாரம், அரசியல் உள்பட அனைத்து துறைகள் சார்ந்த விஷயங்களையும் விவாதிக்க ப.சிதம்பரமே தகுதியானவர். அவர் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டும் என்ற கட்டாய சூழல். இதனால் அவருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டுவந்தது.

இதற்கிடையில் பேரறிவாளன் விடுதலையும் அதை தி.மு.க.வினர் வரவேற்று கொண்டாடியதும் காங்கிரஸ் தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. எம்.பி. பதவியை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கோஷங்களும் ஒலித்தன. இதனால் காங்கிரஸ் எம்.பி. பதவியை ஏற்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் அரசியலில் கூட்டணி என்று வரும்போது சில விஷயங்களில் சமரசம் ஆவதை தவிர வழியில்லை என்று மேலிடத்தலைவர்கள் மவுனம் காத்தனர்.

இதற்கிடையில் எம்.பி. பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என்ற விவாதங்களும் தொடர்ந்தன.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம் இருவரும் டெல்லியில் முகாமிட்டு இருந்தனர். இருவரும் தனித்தனியாக சோனியாவையும் சந்தித்தனர்.

காங்கிரஸ் தலைமை ப.சிதம்பரத்தை வேட்பாளராக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை சென்று மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி சிதம்பரத்திடம் தெரிவித்துள்ளனர். அவர் நேற்று இரவே சென்னை திரும்பினார்.

வேட்புமனுவை முன்மொழிய 10 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து தேவை. அதற்காக இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மறுநாள் (திங்கள்) தலைமை செயலகத்தில் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.