சிங்கப்பூரில் குழந்தைகளிடம் தீவிரமாக கொரோனா பரவி வருவதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்தியாவில் காணப்படும் பி.1.617.2 வகை கொரோனா சிங்கப்பூரிலும் பரவி இருப்பதாக அந்நாடு தெரிவித்தது. ஆனால், சிங்கப்பூரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதாக நேற்று சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சிங்கப்பூருடனான விமான சேவைகளை உடனடியாக மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும் என்றார்.
அதன்பின்னர் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில், சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்டு இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை என தெரிவித்தது.
அத்துடன், சிங்கப்பூரில் புதிய வகை உருமாறிய கொரோனா பரவியதாக டெல்லி முதல்வர் வெளியிட்ட டுவிட்டர் தொடர்பாக சிங்கப்பூர் அரசு அதிருப்தி அடைந்தது. இந்திய தூதரை அழைத்து கடும் ஆட்சேபம் தெரிவித்தது. டெல்லி முதல்வருக்கு கொரோனா மாறுபாடுகள் அல்லது சிவில் விமானக் கொள்கை குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறியதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார்.
இந்த தகவலையடுத்து, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டன, இருப்பினும், நன்கு தெரிந்து கொண்டு பேசவேண்டியவர்களின் பொறுப்பற்ற கருத்துக்கள், நீண்டகால ஒத்துழைப்பை பாதிக்கும் என அவர் கூறி உள்ளார். அத்துடன், டெல்லி முதல்வர் இந்தியா சார்பில் பேசவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.