டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை 6 வாலிபர்கள் கற்பழித்து கொடூரமாக கொலை செய்தனர்.
நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட ராம்சிங், பவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டான். மைனர் என்பதால் அந்த சிறுவன் விடுவிக்கப்பட்டான். முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள் அடித்து கொல்லப்பட்டான்.
மற்ற குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் தாக்கூர் ஆகிய 4 பேருக்கும் சிறப்பு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டு அந்த தண்டனையை உறுதி செய்தது.
இதையடுத்து குற்றவாளிகளில் ஒருவனான வினய்சர்மா தனக்கு கருணை காட்ட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மனு அளித்தார். ஆனால் குற்றவாளிகளுக்கு கருணை காட்ட ஜனாதிபதி மறுத்து விட்டார். இதையடுத்து 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற 4 வாலிபர்களை என்கவுண்டர் நடத்தி போலீசார் சுட்டுக் கொன்றனர். ஆனால் 7 ஆண்டுகளாகியும் டெல்லி குற்றவாளிகளுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படாதது ஏன் என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து டெல்லி நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை டெல்லி திகார் ஜெயில் அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.
டெல்லி திகார் ஜெயிலில், தூக்கு தண்டனை கைதிகளை தூக்கில் போடுவதற்கான ஊழியர் யாரும் இல்லை. இதை அறிந்ததும் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் இருந்து பலர், தூக்கில் போடும் வேலையை செய்ய தயார் என்று முன் வந்தனர். ஆனால் அவர்கள் யாரையும் டெல்லி திகார் ஜெயில் அதிகாரிகள் அழைக்கவில்லை.
இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய்குமார், தனது தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை 17-ந் தேதி விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் அதுபற்றி கவலைப்படாமல் டெல்லி திகார் ஜெயில் அதிகாரிகள் சில ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். பீகார் மாநிலம் பக்சர் மாவட்ட சிறைத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் 10 தூக்கு கயிறுகளை தயார் செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். இன்னும் ஓரிரு நாட்களில் 10 தூக்கு கயிறுகளும் டெல்லி திகார் ஜெயிலுக்கு சென்று சேர்ந்து விடும். இதனால் 4 குற்றவாளிகளும் தூக்கில் போடப்படுவது உறுதியாகி விட்டது.
இதற்கிடையே தூக்கில் தொங்கவிடும் பணிகளை செய்ய 2 பேரை அனுப்புமாறு உத்தரபிரதேச மாநில அரசை கேட்டுக்கொண்டது. இதையடுத்து உத்தரபிரதேச கூடுதல் டி.ஜி.பி. அனந்தகுமார் 2 பேரை டெல்லி திகார் ஜெயிலுக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன்மூலம் தூக்கு கயிறும், தூக்கில் போடுவதற்கான வேலைகளை செய்யும் ஊழியர்களும் தயார் நிலையில் இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு டெல்லி திகார் ஜெயிலில் பயிற்சி கொடுப்பது உள்பட சில முன் ஏற்பாடுகளை செய்துமுடிக்க வேண்டியுள்ளது.
தூக்கு தண்டனை பெற்ற கைதிகளின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டால் 14 நாட்களுக்குள் தூக்கிலிட வேண்டும் என்பது விதியாகும். அதன் அடிப்படையில் பார்த்தால் வரும் 16-ந் தேதி 4 குற்றவாளிகளும் தூக்கில் போடப்பட வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே டிசம்பர் 16-ந் தேதிதான் டெல்லியில் நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்பயாவுக்கு நீதி கிடைக்க செய்ய இந்த தேதியை டெல்லி திகார் ஜெயில் அதிகாரிகள் தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் குற்றவாளி தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மீது 17-ந்தேதி தான் விசாரணை நடைபெறும் என்பதால் தூக்கில் போடுவது காலதாமதம் ஆகலாம் என்று தகவல் வெளியானது. இதையடுத்து நிர்பயாவின் தாய் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில் அவர், நீதி தாமதமாகி வருகிறது. குற்றவாளியின் மனு மீது விசாரணை நடக்கும் போது என்னையும் அதில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே 4 குற்றவாளிகள் 16-ந்தேதி தூக்கிலிடப்படாவிட்டால் அவர்களுக்கான தண்டனை தேதி விவரங்கள் மறுநாள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.