டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் போலீஸ் வன்முறை – திருமாவளவன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அங்கே நடைபெற்ற போராட்டத்தின்போது 4 பேர் பலியாகி உள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்திக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல் துறையினர் அத்து மீறி நுழைந்ததும், தாக்குதல் நடத்தியதும், மாணவர்களைக் கைகளை உயர்த்தி அணிவகுப்பாக நடக்க வைத்ததும், கைது செய்ததும் சட்ட விரோதமானது. அத்துடன், காவல்துறையினரே இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
டெல்லி துணை முதல்-அமைச்சர் மனிஷ் சிசோடியா பேருந்தில் காவலர்கள் கேன் வைத்து பெட்ரோலை ஊற்றுகின்ற சில புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள். பேருந்துகள் மீது யார் தீவைத்தது என்பது தெரியும். பா.ஜ.கவின் மோசமான அரசியலுக்கு இந்தப் புகைப்படங்களே சாட்சி. இதற்கு பா.ஜ.க தலைவர்கள் விளக்க மளிக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிகழ்வுகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சென்னையில் காவல்துறையினர் வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்த காணொளிகள் வெளியானதையும், அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காவல் துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பான காணொளிகள் வெளியானதையும் நினைவுப்படுத்துகின்றன.
மாற்றுக்கருத்தே கூடாது என ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் வகையில், போராடும் மாணவர்கள் உள்ளிட்ட மக்கள்மீது ஒடுக்குமுறையைத் திணிக்கும் பா.ஜ.க.வின் பாசிச அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தற்போது ஜனநாயக சக்திகள் யாவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் தேவை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்ட விழைகிறது.
மதவாத பா.ஜ.க. அரசின் ஏவுதலின்படி, காவல்துறையினர் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தியுள்ள தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வகையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டுமெனவும் தொடர்புடைய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.