மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,495 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
கடந்த 20-ந்தேதி பாதிப்பு 5,326 ஆக இருந்தது. மறுநாள் 6,317 ஆக உயர்ந்த நிலையில், நேற்று மேலும் அதிகரித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 47 லட்சத்து 65 ஆயிரத்து 976 ஆக உயர்ந்தது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 3,205 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு ஆயிரத்திற்குள் இருந்து வந்த நிலையில் நேற்று 1,201 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது கடந்த 48 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும்.
குறிப்பாக தலைநகர் மும்பையில் நேற்று முன்தினம் 160 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி இருந்த நிலையில், நேற்று 490 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல டெல்லியிலும் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 50-க்குள் இருந்து வந்த நிலையில், நேற்று 125 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவில் அதிகம் ஆகும்.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 6,960 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 8 ஆயிரத்து 926 ஆக உயர்ந்தது.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 78,291 உயர்ந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 66.86 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 12,05,775 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.