டெல்லி மதுபான ஊழல் – 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா வீட்டில் ஏற்கனவே சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. அவரது வங்கி லாக்கரிலும் சோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் 35 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் பல்வேறு இடங்களிலும், குருகிராம், லக்னோ, ஐதராபாத், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே சி.பி.ஐ. சோதனை நடத்திய நிலையில் மதுபானம் விற்க ஒப்பந்தம் பெற்றவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. டெல்லியில் குற்றம்சாட்டப்பட்ட சமீர் மகேந்த்ரு வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதே நேரத்தில் மதுபான விற்பனை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அலுலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறவில்லை என்று ஆம்ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக மணிஷ் சிசோடியா கூறியதாவது:-
இந்த வழக்கில் முதலில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள். அவர்களும் எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள். இது அரவிந்த் கெஜ்ரிவால் செய்யும் நல்ல பணிகளை தடுக்கும் முயற்சியாகும். சி.பி.ஐ., அமலாக்கத்துறை எல்லாம் வரட்டும். என்னிடம் எந்த தகவலும் இல்லை. பள்ளிகளின் வரைபடங்களை மட்டுமே அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.