டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் அனைத்து உண்மைகளையும் சொல்வார் – மனைவி தகவல்
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை 28-ந்தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.அமலாக்கத்துறை காவல் முடிவடைவதை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
அப்போது அவர் இந்த வழக்கின் உண்மைகளையும், ஆதாரங்களையும் கோர்ட்டில் வெளியிடுவார் என அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
அமலாக்கத்துறை காவலில் இருக்கும் கெஜ்ரிவாலை நான் சந்தித்தபோது, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினர் கடந்த 2 நாட்களாக 250-க்கு மேற்பட்ட முறை சோதனை நடத்தியும் ஒரு பைசாவை கூட கண்டுபிடிக்கவில்லை என அவர் என்னிடம் கூறினார். ஆம் ஆத்மி தலைவர்கள் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியும் எந்த பணமும் கிடைக்கவில்லை.
எங்கள் (முதல்-மந்திரி வீடு) இடத்தில் இருந்து வெறும் ரூ.73 ஆயிரம் மட்டுமே கண்டுபிடித்தனர். மதுபான கொள்கை ஊழல் பணம் எங்கே? இந்த வழக்கில் உண்மைகளை 28-ந்தேதி (இன்று) கோர்ட்டில் வெளியிடுவேன் என்றும், ஆதாரங்களை சமர்ப்பிப்பேன் என்றும் கெஜ்ரிவால் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு துணிச்சலான தேசபக்தர். உண்மையான நபர். அவர் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தபோதிலும் அவரது மனஉறுதி மிகவும் வலுவானது. அமலாக்கத்துறை காவலில் இருந்துகொண்டே மாநில நீர்வளத்துறை மந்திரி அதிஷிக்கு எனது கணவர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால் மத்திய அரசு இதை பிரச்சனை ஆக்குகிறது. டெல்லியை அழிக்க அவர்கள் நினைக்கிறார்களா?
இந்த விவகாரத்தில் எனது கணவர் மிகுந்த வருத்தம் அடைந்தார். டெல்லி முதல்-மந்திரியின் உடல்நலம் மற்றும் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
இவ்வாறு சுனிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அமலாக்கத்துறை காவலில் இருக்கும் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவாலுக்கு ஒருகட்டத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு 46 மி.கி. அளவுக்கு குறைந்ததாகவும், இது மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் கூறியிருப்பதாகவும் கட்சித்தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்த நிலையில் டெல்லி சட்டசபையில் நேற்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக கெஜ்ரிவாலை விடுதலை செய்ய வலியுறுத்தி சட்டசபைக்கு வெளியே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். இதில் மந்திரிகள் அதிஷி, சவுராப் பரத்வாஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அப்போது அதிஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முதல்-மந்திரி கெஜ்ரிவால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதை எதிர்த்து இன்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். நாட்டில் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன. நாட்டிலேயே முதல் முறையாக முதல்-மந்திரி ஒருவர் அதுவும் பொதுத்தேர்தலுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருக்கிறார்’ என குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே அமலாக்கத்துறை காவலில் இருந்து கெஜ்ரிவால் உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு துணைநிலை கவர்னர் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சிறையில் இருந்துகொண்டு ஆட்சி நடத்தப்படாது என்று டெல்லி மக்களுக்கு என்னால் உறுதியளிக்க முடியும்’ என கூறினார்.