டெல்லி தலைவர்களுடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆலோசனை
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் ஏற்பட்டுள்ள மனஸ்தாபத்தை தணிக்க முடியாமல் பா.ஜனதா தவிக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றிலுமாக கை கழுவி விட்டு தங்கள் பக்கம் வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார்.
ஆனால் பா.ஜனதாவோ இந்த இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை விட அடுத்து வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கான யோசனையில் இருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலையில் அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி எடுத்து கூறியதாக கூறப்படுகிறது. அடுத்ததாக அமித்ஷா, சந்தோஷ் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அப்போது பா.ஜனதா எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி விவாதிக்கிறார்கள். அதில் எடுக்கப்படும் முடிவை தொடர்ந்து பா.ஜனதா நிலைப்பாட்டை அண்ணாமலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தம்பிதுரை பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சிறந்த பட்ஜெட்டை வழங்கிய மோடிக்கு வாழ்த்து சொல்லவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கருத்துக்களை தம்பி துரை மூலமாக மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
மத்திய மந்திரி ஜெய் சங்கரை அண்ணாமலை சந்திக்கிறார். அப்போது இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குதல், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். இலங்கையில் நிலவும் பிரச்சினைகளை அண்ணாமலை நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார்.
அதேபோல் சமீபத்தில் ஜெய்சங்கரும் இலங்கை சென்று வந்தார். எனவே இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில மந்திரிகளை சந்தித்து தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் பற்றிய கோரிக்கைகளையும் வழங்க உள்ளார்.