Tamilவிளையாட்டு

டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் அணியின் உதவி பயிற்சியாளராக அஜித் அகர்கர் நியமனம்

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அஜித் அகர்கர் நேற்று நியமிக்கப்பட்டார். 44 வயதான அகர்கர் இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 இருபது ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி, கொல்கத்தா அணிக்காக விளையாடி இருக்கும் அகர்கர் தற்போது டெலிவிஷன் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அவர் பயிற்சியாளர் பொறுப்பில் கால்பதிக்க இருப்பது இதுவே முதல்முறையாகும். இன்று தொடங்கும் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரில் தனது வர்ணனையாளர் பணி நிறைவடைந்ததும் டெல்லி அணியினருடன் இணைகிறார்.

இது குறித்து அகர்கர் கூறுகையில் ‘இந்த சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அங்கம் வகிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வீரராக இருந்துள்ள நான் ஒரு வித்தியாசமான பொறுப்புக்காக அணிக்கு திரும்பும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளேன். உலகின் மிகச்சிறந்த திறமையை கொண்ட வீரர்களில் ஒருவரான ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் அற்புதமான இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். மேலும் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் ஜாம்பவான். அவருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்றார்.

இதற்கிடையே, டெல்லி அணியின் மற்றொரு உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டரான 40 வயதான ஷேன் வாட்சனை நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.