Tamilசெய்திகள்

டெல்லி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து – அறிக்கை தாக்கல் செய்யுமாறு அமைச்சர் வலியுறுத்தல்

வடக்கு டெல்லியில் உள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு
வாகனங்களுடன் விரைந்தனர்.

மலைப் போல் குவிந்திருக்கும் குப்பையில் ஏற்பட்ட தீயால் டெல்லி சுற்றுப்புற பகுதிகளில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்களும் அவதியடைந்துள்ளனர். குப்பைக்கிடங்கில்
ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தீ விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சம்ப்பிக்குமாறு டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு, கிழக்கு டெல்லியின் காஜிபூர் குப்பைக் கிடங்கில் மூன்று தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி அன்று நிகழ்ந்த தீ விபத்தில் தீயை கட்டுக்குள்
கொண்டுவர 50 மணி நேரத்திற்கும் மேல் தீயணைப்பு வீரர்கள் போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.