X

டெல்லி கலவரத்தை மறைக்க கொரோனா வைரஸ் பீதி – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது.

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறினார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். இந்தநிலையில் டெல்லியில் நடந்த கலவரத்தை திசை திருப்பவே கொரோனா வைரஸ் குறித்த பீதியை கிளப்புவதாக மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

மேற்கு வங்கத்தின் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் புனியாத்பூரில் நடந்த பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து பலரும் கவலைப்படுகிறார்கள். ஏன் உலகமே கவலைப்படுகிறது. ஆனால் மக்கள் இதைக் கண்டு பீதி அடைய வேண்டாம்.

கொரோனா வைரஸ் பயங்கரமான நோயாக இருந்தாலும் அதுகுறித்து பீதியை கிளப்பாமல் இருக்க வேண்டும். டெல்லி கலவரத்தை மறைக்கவும், திசை திருப்புவதற்காகவும் சில ஊடகங்கள் இதனை மிகைப்படுத்துகின்றன. பாதிப்பு ஏற்படும் போது அந்த தகவலை அறிவியுங்கள்.

அதேநேரத்தில் டெல்லியில் இறந்தவர்கள் அனைவரும் கொரோனா வைரசால் இறக்கவில்லை. அவர்கள் கொரோனா வைரசால் இறந்திருந்தால் கூட அதை நாங்கள் ஏற்றிருப்போம். ஆனால் மகிழ்ச்சியோடும், புன்னகை செய்த முகத்தோடும் சென்றவர்கள் இரக்கம் இன்றி கொல்லப்பட்டனர்.

இதற்கு பா.ஜனதா மன்னிப்பு கூட கேட்கவில்லை. அவர்களின் ஆணவத்தை பற்றி சிந்தியுங்கள். அவர்கள் கோலி மாரோ (சுட்டுத்தள்ளுங்கள்) என்று சொல்கிறார்கள். உத்தரபிரதேசமும், மேற்கு வங்கமும் ஒன்றல்ல என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.