X

டெல்லி அனுமன் ஜெயந்தி கலவரம் – 25 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை

தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரி பகுதியில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.

கல்வீச்சு மற்றும் வாகனங்கள் தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் போலீசார் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் நேற்று மேலும் 2 பேரை கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் ஒருவர், அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது வீசுவதற்காக கலவரக்காரர்களுக்கு கண்ணாடி பாட்டில்களை வழங்கியதை ஒப்புக்கொண்டதாக போலீசார்
தெரிவித்தனர்.

மற்றொருவர் கூட்டத்தினரை நோக்கி சூப்பாக்கி சூடு நடத்திய சோனு சேக் என்பது கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக சோனு சேக் மனைவியை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் மீது அவரது உறவினர்கள் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

ஜஹாங்கிர்புரியில் உள்ள ஒரு மசூதியில் சிலர் காவி கொடியை ஏற்ற முயன்றதாக பல அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் குற்றம் சாட்டினர். இதனால் கல் வீச்சு மற்றும் வன்முறை
ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதை மறுத்துள்ள டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா, அத்தகைய முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும், இந்த வழக்கில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கைது
செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

வன்முறை மோதலில் ஈடுபடுபவர்கள் எந்த மதம் என்று பாராமல் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று மாலை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லி காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜஹாங்கீர்புரி வன்முறை வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.