வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் டெல்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இமாச்சலபிரதேசத்தில் இருந்து அதிக அளவில் வெளியேறிய தண்ணீர் அரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையை அடைந்தது. அங்கிருந்து யமுனா நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் யமுனா நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் டெல்லிக்குள் புகுந்து அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்தது.
சாலைகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. ஏற்கனவே டெல்லியில் ஒரே நாளில் 15 செ.மீ. மழை பெய்திருந்த நிலையில் யமுனா நதி வெள்ளமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கார், பஸ் என பல வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
சுத்திகரிப்பு நிலையங்களில் வெள்ளம் புகுந்ததால் அணைகள் மூடப்பட்டன. இதனால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் கன மழை காரணமாக யமுனா ஆற்றின் நீர் மட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயந்ந்தது. நேற்று பகல் 1 மணிக்கு 208.62 மீட்டராக அதிகரித்தது. ஆற்றின் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டி சென்றதால் பெரும் வெள்ளம் டெல்லிக்குள் புகுந்தது.
இந்த நிலையில் யமுனா ஆற்றுக்கு வரும் நீர் வரத்து சற்று குறைந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு ஆற்றின் நீர் மட்டம் 208.62 மீட்டர் அளவிலேயே இருந்தது. நீர் மட்டம் உயராததால் இனிமேல் குறைய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய நீர் ஆணைய இயக்குனர் ஷரத் சந்திரா கூறும்போது, அரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னி குண்ட் தடுப்பணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 4 மணிக்கு 80 ஆயிரம் கன அடியாக குறைந்தது. யமுனா ஆற்றில் நீர் மட்டம் சீராகி விட்டது. இன்று ஆற்றின் நீர் மட்டம் 208.45 மீட்டராக குறையும் என்று எதிர் பார்க்கப்படு கிறது என்றார்.
யமுனா ஆற்றின் நீர் மட்டம் நேற்று இரவு நிலையான அளவு வந்து குறைய தொடங்கி இருந்தாலும் அபாய கட்டத்தை விட மூன்று மீட்டர் உயரத்தில் தண்ணீர் இன்னும் பாய்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யமுனா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி சென்ற தண்ணீரின் அளவு குறைய தொடங்கியுள்ளதால் டெல்லியில் வெள்ளம் வடிகிறது.
அதே வேளையில் டெல்லி முழுவதும் வெள்ள காடாக இருப்பதால் தண்ணீர் வடிய சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் நாளை மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கன மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றுக்கு மேலும் 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் 17 பேர் பலியானார்கள். இமாச்சலபிரதே சத்தில் 6 பேர், அரியானாவில் 5 பேர் பஞ்சாப்பில் 4 பேர், உத்தரகாண்ட்டில் 2 பேர் உயிரிழந்தனர். ஒட்டு மொத்தமாக வட மாநிலங்களில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது.
இதில் இமாசல பிரதேசத்தில் அதிகமானோர் பலியாகி இருக்கிறார்கள். அங்கு பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தும் இமாசலபிரதேச மாநிலத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு லஹவுல் ஸ்பிதி மற்றும் கின்னார் மாவட்டங்களில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் 1000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.